வியத்தகு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்
மபாஸ் சுவைதான் - பிரபல இஸ்லாமிய அறிஞர் தாரிக் சுவைதானின் புதல்வியுடனான ஒரு நேர் காணல் - நன்றி மீள்பார்வை
குவைத் நாட்டைச் சேர்ந்த கலாநிதி தாரிக் சுவைதான் இஸ்லாமிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒர் ஆளுமை. நவீன இஸ்லாமிய எழுச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர். அவரது புதல்விதான் மபாஸ் சுவைதான். கனடா பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைப் பட்டதாரியாக உள்ள இவர் Creative copy right என்ற நிறுவனத்தை நடாத்தி வருகிறார். இவர் தொழில் ரீதியாக ஒரு பத்திரிகையாளராகப் பணி புரிகிறார். அண்மையில் இலங்கை வந்திருந்த போது அவருடன் மேற்கொண்ட சிறிய உரையாடலை மீள்பார்வை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு- அஹ்ஸன் ஆரிப்
உங்களது Creative copy right நிறுவனம் என்ன பணியை முன்னெடுக்கிறது?
எமது நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான சிந்தனைகளைக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். பல புத்தகங்களை மொழிமாற்றம் செய்துள்ளோம். தஃவா மற்றும் வியாபாரம் என்ற இரண்டு விடயங்களையும் சரியாகப் புரிந்துகொண்ட நிலையில் இரண்டையும் செய்து வருகிறோம்.
நீங்கள் சக நண்பிகளோடு ’ஸபீரா ஸனாயா” என்ற அமைப்பின் ஊடாக இலங்கை வந்திருக்கிறீர்கள். இந்த அமைப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?.
’ஸபீரா ஸனாயா” என்பது ஒரு பெண்கள் அமைப்பு. பெரும் பாலும் 12 முதல் 20 வயது வரையான இளம் யுவதிகள்தான் இதில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். இது குவைத் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அடுத்தவர்களுக்கு உதவுதல், இளம் யுவதிகளை சமூகக்களத்தில் பங்காளிகளாக மாற்றுதல், அவர்களை சாதிக்கத் தூண்டுதல் என்பன இந்த அமைப்பின் பிரதான நோக்கங்களாகும்.
இவ் அமைப்பு இலங்கைக்கு ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதென முடிவு செய்தது. அதன் விளைவாகத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோம். எமது செயற்பாடுகளுக்கான பணத்தை நாமே சேர்த்துக்கொண்டோம். இலங்கையில் உள்ள மேர்ஸி கல்வி வளாகத்தைப் பற்றி அறிந்துகொள்வது எமது பயணத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. அத்தோடு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வந்தோம்.
உங்கள் தந்தை பற்றிய உங்களது மனப்பதிவுகளை கூற முடியுமா?.
எனது தந்தை இஸ்லாமிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒர் ஆளுமை. நான் அவரை அதிகம் நேசிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர். எனது தந்தை வீட்டில் எங்களோடு எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை நீங்கள் அறிந்தால், அவரை நீங்கள் இன்னும் அதிகமாக நேசிப்பீர்கள் என்று நான் எனது நண்பிகளிடம் அடிக்கடி கூறுவேன்.
அவர் அதிகம் இரக்கமானவர். கனிவானவர். எப்போதும் எங் களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். எப்போதும், எல்லாமே சாத்தியமானதுதான் என்று எம்மை சிந்திக்கப் பழக்கியவர் அவர். எமது நிறுவனத்தின் மூலம் அவரது புத்தகங்களையும் வெளியிட்டுள்ளோம். எனவே, தொழில் ரீதியான ஒரு தொடர்பும் எம்மிடையே உள்ளது.
வீட்டில் பல விடயங்கள் தொடர்பாகவும் நாம் கருத்துக்களைப் பரிமாற்றிக்கொள்வோம். விவாதங்கள் கூட இடம்பெறும். இஸ்லாம், பொருளாதாரம், அரசியல், கல்வி என்று எல்லா விடயங்கள் பற்றியும் நாம் விவாதிப்போம். எங்கள் வீட்டில் ஜனநாயக சூழல் காணப்படுகிறது.
உங்கள் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் ஈடுபடும் துறை பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறோம்?
உங்கள் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் ஈடுபடும் துறை பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறோம்?
எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஆறு பிள்ளைகள். மூன்று சகோதரர்கள். மூன்று சகோதரிகள். நான் ஐந்தாவது பிள்ளை. எனது மூத்த சகோதரர் ஒரு வைத்தியர். அடுத்ததாக உள்ள சகோதரி தத்துவத்துறையில் கற்கிறார். அடுத்த சகோதரி வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த சகோதரர் சட்டத் துறையில் கற்று வருகிறார். நான் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு வருகிறேன். கடைசி சகோதரர் வர்த்தகத் துறையில் கற்று வருகிறார். நாங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான தமக்குப் பிடித்த துறையில் ஈடுபடுகிறோம். இதனை எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நாம் தெரிவு செய்தோம். எங்களது துறைகளிலும் அதன் ஈடுபாட்டிலும் தந்தை எம்மை ஊக்குவித்து வருகிறார்.
உங்கள் தந்தை உலகறிந்த ஒரு அறிஞராக இருக்கிறார். அவரது ஆளுமை, அவரது புகழ் போன்றன உங்களில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது?
அவர் எனக்கு அடிப்படையில் தந்தையாக இருக்கிறார். இதுவே எனது முதல் சந்தோசம். இவ்வாறான ஒருவருக்கு மகளாக இருப்பதென்பது பொறுப்புவாய்ந்தது என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது என்னைப் பொருத்த வரையில் ஒரு பாக்கியமாகவே நான் கருதுகிறேன்.
சமகாலத்தில் அறபுப் புரட்சியைப் பற்றித்தான் உலகம் பேசிக் கொண்டிருக்கிறது. உங்கள் தந்தையார் இது விடயமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் ஒரு நபர். அறபுலகின் இளம் யுவதி என்ற வகையில் அறபுப் புரட்சியை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?.
அறபுப் புரட்சி என்பது மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். அது உடனடியாக மாற்றங்களைக் கொண்டுவராது. தற்போது கொந்தளிப்பான சூழ்நிலைதான் காணப்படுகிறது. ஆனால், அதன் எதிர்காலம் மிக பிரகாசமானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். கஷ்டத்திற்குப் பிறகுதான் சுகம் இருக்கிறது. இருளுக்குப் பின்னர்தான் உதயம் இருக்கிறது. பெரும் மழை ஒன்று பெய்து நின்ற பின்னர் வானவில்லை நாம் ரசிக்கிறோம் இல்லையா?.
எனவே, நாம் அனுபவிக்கின்ற கஷ்டங்களுக்குப் பின்னர் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இளைஞர்கள் பலப்படுகிறார்கள். தமது எதிர்காலத்திற்காக தியாகங்களைச் செய்ய அவர்கள் தயாராகிவிட்டார்கள். மக்கள் தமது அபிலாசைகளுக்காகப் போராடத்துவங்கி விட்டார்கள். எனவே, தற்போதைய சூழ்நிலை கவலை தருவதாக இருந்தாலும் எதிர்காலம் எல்லோருக்கும் நலவு பயப்பதாக இருக்கப் போகிறது என்பது எமது உறுதியான நம்பிக்கை.
குவைத் நாடு இலங்கைக்கு அதிகமான உதவிகளை செய்யும் நாடுகளில் ஒன்று. நீங்கள் குவைத் பிரஜை என்ற வகையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?.
அல்லாஹ் எமக்கு அதிக செல்வங்களைத் தந்திருக்கிறான். அவற்றை இஸ்லாத்துக்காகவும் மக்களுக்காகவும் செலவு செய்வது எமது கடமை. தற்போதைய சூழ் நிலையில் அதிகமான உதவிகள் சிரியா, ஜோர்தான் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றன. அந்த நாட்டு மக்கள் அதிகம் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இலங்கையிலும் எமது சகோதர்கள்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு உதவுவது எமது கடமை. இந்தப் பயணமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். இலங்கை மக்களது புன்னகை மிக அழகானது. இந்த நாட்டு சிறுவர்களது திறமைகளைப் பார்க்கும் போது புதுமையாக இருக்கிறது.
மேர்ஸி கல்வி வளாகத்தில் உள்ள சிறுவர்கள் அழகாகக் குர்ஆன் ஓதுகிறார்கள். அறபுப் பாடல்களைப் பாடுகிறார்கள். இந்த நாட்டு மக்கள் அதிகம் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது எமக்கு மிக்க சந்தோசத்தைத் தருகிறது. எமது பயணமும் திருப்தியளிக்கிறது.
நன்றி்: மீள்பார்வை
நன்றி்: மீள்பார்வை
Comments
Post a Comment